Friday, November 18, 2011

13.11.11 Aadhav Trust - Kavinar Niraimathi.......


நம்பிக்கையும் ஊக்கமும்   பிறப்பெடுத்து வந்தனரோ சகோதரிகளாய்..

கவிஞர் நிறைமதி
           நேற்று மாதிரி இன்று இல்லை. இன்று போல் நாளை இல்லை. வித விதமான அனுபவங்களுடன் ஒவ்வொரு நாளும் நமக்காக காத்துக் கிடக்கிறது. அதனால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமானதாகவும், அலுப்பு தட்டாமலும் ஓடுகிறது. நாளை எப்படி இருக்கும் என்று அறிய எல்லோருக்குமே விருப்பம் இருக்கிறது. அந்த விருப்பமே ஜோசியர்களுக்கு சாதகமாய் ஆக, அவர்கள் ஹேஸ்யம் சொல்லிப் பிழைக்கிறார்கள். நான் விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்ட பின், எனது ஒவ்வொரு நாளையும் பெரிதாய் திட்டமிடுவது இல்லை. காலமும், நண்பர்களும், சமூக தேவைகளுமாய் ஏதாவது ஒன்று என்னை  எங்கெங்கோ இழுத்துக் கொண்டு செல்கிறது. நானும் காலத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு உற்சாகமாய் ஓடிக் கொண்டிருக்கிறேன். பயணம் உற்சாகமளித்தாலும், செல்லும் பாதை பல சமயங்களில் கடினமானதாய், முட்கள் நிறைந்ததாகவும், மற்ற நேரங்களில் நாற்வழிச் சாலை மாதிரி சொகுசாகவும், சில சமயம் வான்வழி போல் மனக்கிளர்ச்சி கொடுப்பதாகவும் உள்ளது. பயணமும், அனுபவமுமே தேடலாய் மாறும் பொழுது பயணம் கொடுக்கும் சிறு சிறு வலிகளும் சுகமானதே.

       வாழ்க்கைப் பயணத்தில் நாம் கடந்து வந்த நாட்கள் சில ஆயிரங்கள் ஆனாலும், வெகு சில தினங்களே என்றும் மறவாது மனதில் நிலைத்து நிற்கின்றன. கடந்த    13 .11 .2011  அப்படி ஒரு மறக்க இயலாத நாளாக எனக்கு அமைந்து விட்டது. ஞாயிற்றுக் கிழமையான அந்த நாளில் நான் சில
நிகழ்ச்சிகளை மனதுக்குள் திட்டமிட்டு எதிர் நோக்கியிருந்தேன் ஆனால் காலை 6.30 மணிக்கே என்னை சென்னையிலிருந்து தொலைபேசியில் அழைத்த எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன், ஒரு பெரிய வாய்ப்பை வழங்கி, திசை திருப்பி மறக்க இயலாத ஒரு நாளை எனக்கு வழங்கி விட்டார். தினம்,தினம் நம்மைச் சுற்றி ஆயிரம் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில நிகழ்வுகளில் நமது பங்கேற்பும், சில நிகழ்வுகள் நமக்கு அறியப்பட்டும், பல நிகழ்வுகள் நம் அறிவுக்கு எட்டாமலும் கழிந்து போகின்றன. அப்படியான நிகழ்வுகள் சில நமக்கு பின்னொரு நாளில் தெரிய வரும்பொழுது நாம் அதில் பங்கேற்கவும், அதை அனுபவிக்கவும் தவறி விட்டோமே என வருந்த வைப்பதும் உண்டு. அதே மாதிரி நல்ல வேளை நாம் தப்பித்து விட்டோம் என எண்ண வேண்டிய நிகழ்வுகளும் உண்டு.  எஸ்.வி.வி என்னை ஈடுபடுத்தியது ஒரு சிறந்த நிகழ்வாகத்தான் இருக்கும்
என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள். காலம் அதன் கருணையை (எஸ்.வி.வி. யின் வார்த்தைகளிலேயே ) அன்று எஸ்.வி.வி. மூலமாய் என் மீது செலுத்தியது.

        வானவன் மாதேவி இயல் இசை வல்லபி இருவரும் சேலத்தை சேர்ந்த இரு பெரிய ஆளுமைகள். மாதேவி மூத்த சகோதரி. வல்லபி இளையவர். வாழ்க்கையையும், எதிர் காலத்தையும் நம்புவர்கள் நிச்சயம் வாழ்வில் ஒரு முறையேனும் சந்திக்க வேண்டிய சகோதரிகள். பெரும் ஆளுமைகளான எஸ்.ராமகிருஷ்ணன், ச.தமிழ்ச்செலவன், ஜெயமோகன் என்று பெரும்பாலான எழுத்தாளர்களின் வாசகிகள் மட்டுமல்ல, நண்பர்களும் கூட. நவீன இலக்கியம் குறித்து பல மணி நேரம் கூட இவர்கள் இருவரிடமும் நாம் விவாதித்துக் கொண்டிருக்கலாம. அத்துணை அறிவும்,
வாசிப்பு அனுபவமும் உள்ள சகோதரிகள். முப்பது வயதை எட்டி பிடித்துக் கொண்டிருப்பவர்கள். எப்பொழுது பேசினாலும் நமக்கு  உற்சாகம் வழங்கும் அமுதசுரபிகள். எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது என நீங்கள் யோசிக்கலாம். எல்லா வகையிலும் உடல் ஆரோக்கியமானவர்கள் இவ்வாறான திறனுடன் விளங்கினாலே நாம் அது கண்டு வியப்பது உண்டு. ஆனால் மாதேவியும், வல்லபியும் தசை சிதைவு (muscular dystrophy )  என்ற நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்.
             நாம் சந்தித்து இருக்கின்ற பல மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதாவது ஒரு குறை இருக்கும். கால் ஊனமோ, கை செயல் இழப்போ, கண் பார்வை அற்றவராகவோ, காது கோளாறு உள்ளவராகவோ இருக்கப் பார்த்திருக்கிறோம். மாதேவி, வல்லபி போன்றோரைத் தாக்கியுள்ள தசை சிதைவு காலில் தொடங்கி படிப்படியாக கழுத்து வரை நீடித்து உடம்பு முழுவதையும் செயலிழக்க செய்துவிடும். ஒரு சிறு கையசைவுக்குக் கூட யாரேனும் உதவ வேண்டும். உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும் இருவரின் ஆளுமையும்.

       மாதேவியும், வல்லபியும் மேலும் பல நல்லுள்ளங்களுடன் இணைந்து “ஆதவ் அறக்கட்டளை” தொடங்கியிருக்கிறார்கள். அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பெரும்பாலோர் இளைஞர்கள். ரசிகர் மன்றங்களின் பின்னாலும், தனி மனித துதி பாடும் அரசியல் கட்சிகளின் பின்னாலும் சுற்றித் திரியும் இளைஞர்களின் மத்தியில் ஆதவ் அறக்கட்டளையாளர்களைப் பார்க்க, பார்க்க மனம் நிறைகிறது.
    நவம்பர் மாதம் 13ம் தேதி ஆதவ் அறக்கட்டளையின் சார்பாக தசை சிதைவாளர்களுக்கான இல்லம், கணினி பயிலகம், மற்றும் நூலகம் ஆகிய மூன்றின் திறப்பு விழாவை, சேலத்தை ஒட்டி அமைந்துள்ள சிவதாபுரத்தில் தொடங்கினார்கள். அந்த நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
உரையாற்றுவதாக இருந்தது. எஸ்.ராவிற்கு உடல் நிலை சரியில்லாததால், நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து வரவிருந்த எஸ்.வி.வி.வாழ்த்துரை வழங்க ஒப்புக் கொண்டுள்ளார். எஸ்.வி.வி.யின் துணைவியாருக்கு 12ம் தேதி இரவு சற்றே உடல் நலம் பாதிப்படைய எஸ்.வி.வி.யாலும் வர இயலாத நிலைமை. அதனாலேயே, 13ம் தேதி காலை எஸ்.வி.வி. என்னை தொலைபேசியில் அழைத்ததும் பெரும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டதையும் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் விவரித்துள்ளேன்.
       சிவதாபுரம் பி.வி.மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு எதிரில் அமைந்துள்ளன புதிதாய் அமைக்கப்பட்டுள்ள இல்லம், கணினி மையம் மற்றும் நூலகம். சேலம் மாநகராட்சியின் ஆணையர் திருமிகு. லஷ்மிப்ரியா திறப்பு விழாவில் கலந்து கொண்டு, பி.வி.மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவில் சிறப்புரையும் வழங்கினார். மாற்றுத் திறனாளிகளின் அரசு அலுவலர் திருமிகு.நடராஜனும்
வாழ்த்துரை வழங்கிப் பேசினார். திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடியில் அமைந்துள்ள “அமர் சேவா” சங்கத்தைச் சேர்ந்த திருமிகு. சுமதி, முன்னாள் பேராசிரியை, தன் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது, நீண்ட தூரம் பயணம் செய்து, நிகழ்ச்சிக்கு வந்திருந்து, தன்னம்பிக்கையை தூண்டும் விதமாக உரையாற்றினார். சுமதி அம்மையாரும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்
என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு நகரைச் சேர்ந்த சில இளைஞர்களும், சிறுவர்களும் சிலம்பு, ஒயில், தப்பாட்டம், வாள் விளையாட்டு என பல நிகழ்த்துக் கலைகளை கண்ணுக்கு விருந்தாக்கினார்கள்.
          சேலம் மாநகர ஆணையர் ‘அஞ்சலி’ திரைப்படத்தைக் குறிப்பிட்டு, கடவுளால் படைக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகளாய் சேலத்து சகோதரிகளைப் பாராட்டினார். திருமிகு.நடராஜன் ஆதவ் அறக் கட்டளைக்கு தேவையான உதவிகளை அரசு சார்பாக நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். திருமிகு..சுமதி உள்ளம் உறுதியாக இருக்கும் பட்சத்தில் எந்த வியாதியுமே எதிர் கொள்ளக் கூடியதுதான் என தன்னம்பிக்கை விதைகளை விதைததார். நான் மாதேவிக்கு ‘நம்பிக்கை’ என்றும், வல்லபிக்கு ‘ஊக்கம்’ என்று புதுப் பெயர்கள் சூட்டினேன். இன்றைய தலைமுறையால் உதாசீனப் படுத்தப்படுகின்ற நூல் வாசிப்பு எத்துணை சக்திவாய்ந்தது என்பதற்கு சாட்சிகளாய் சேலத்து சகோதரிகளை பார்ப்பதாக விளம்பினேன். ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் விழாவில் கலந்து கொண்டு மேடைக்கு முன்னால் முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசித்தனர். ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை, நிறைந்த முகூர்த்த நாள் என்றும் சொல்லப்பட்ட நாளில் கிட்டத்தட்ட முந்நூறுக்கும் மேற்பட்டோர்  வந்திருந்து சிறப்பித்தது திருப்தியாய் இருந்தது.       
          அழைப்பிதழிலும், மேடையின் பின் சுவற்றிலும் ‘மொட்டுக்கள் மலரும்  பொழுது’ என கவித்துவமான வார்த்தைகளை காண நேர்ந்தது. மாதேவியும், வல்லபியும் மேடையேறி பின்னவர் வரவேற்புரை நிக்ழ்த்த, முன்னவர் நன்றியுரை பாராட்டினார். அறக்கட்டளைக்கான நன்கொடை பலரால் மேடையில் வழங்கப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கிய விழா மதியம் 2 மணிக்கு நிறைவு பெற்றது. நிகழ்ச்சிகளுக்குப் பின் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. எஸ்.வி.வி.யின் மைத்துனரும் அவரது துணைவியாரும் பெங்களூருவிலிருந்து வந்து கலந்து கொண்டார்கள். தெரிவு செய்தே நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் என் துணைவியார் முழு நிகழ்விலும் என் கூடவே இருந்தார்கள்.       நோய் உடலை மட்டுமே தாக்க முடியும். உள்ளம் உறுதியாய் இருக்கும் பட்சத்தில் எந்த வியாதியாலும் மனிதனை வீழ்த்த முடியாது என்ற உண்மையைப் புரிந்து கொண்டோம். நம் எல்லோரையும் மரணம் எப்பொழுதுமே துரத்திக் கொண்டுதான் இருக்கிறது. நோய் தவிர்த்து வேறு வடிவங்களில் கூட மரணம் நம்மை வீழ்த்தலாம். நோயுற்றவர்களுக்குத் தேவை மன உறுதியும், நம்பிக்கையும் என்பதை உண்ர்ந்தோம்.

      “சுற்றும் வரை பூமி ,    சுடும் வரை நெருப்பு
       வீசும் வரை காற்று ,  போராடும் வரை மனிதன்
       நீ மனிதன்.
   "வைரமுத்துவின்" வரிகள் மாதேவி, வல்லபி சகோதரிகளுக்கே சாலப் பொருந்தும்.